Chidhambaram Natarajar Temple

தமிழெமது தருமமுது

Water bodies names in Tamil

நீர் நிலைகள்

"நீரின்றி அமையாது உலகு" என்பது திருவள்ளுவர் வாக்கு (குறள்-20), அந்த அளவிற்கு உலகில் உள்ள உயிரினங்கள் அனைத்திற்கும் மூலாதாரமாக இருப்பது நீர். இந்த நீர் இயற்கை நமக்களிக்கும் கொடை. அப்படிப்பட்ட உயிர் வாழ ஆதாரமான உயர் நீரை, வெறும் மழையாக மட்டுமல்லாமல், உலகத்து உயிர்களெல்லாம் சேமித்துப் பயன்படுத்தும் விதமாக, கடல், ஆறு என இயற்கையாக அமைந்த பல நீர் நிலைகளையும் தந்திருக்கிறது.

நமது முன்னோர்களும், இந்த நீரின் பெருமையை உணார்ந்து 2000 - 3000 ஆண்டுகளுக்கு முன்பிலிருந்தே, நீரினை சேமித்து வைக்க பல விதமான நீர் நிலைகளை கட்டியுள்ளனர். நீர்நிலைகளை கட்டியதோடு மட்டும் அல்லாமல், அந்த நீரினை பங்கிட்டு கொள்ளவும், பாதுகாக்கவும் பலரை நியமித்து வழி காட்டியுள்ளனர்.  அப்படிப்பட்ட நீர் நிலைகள் அதாவது, நீர் இருக்கும், ஓடும் அல்லது தேக்கி வைக்கப்படும் இடங்களைப் பற்றி தான் இக்கட்டுரையில் பார்க்கப்போகிறோம். நாம் வாழும் இப்புவியில் இயற்கையாக அமைந்த மற்றும் மனிதர்களால் ஏற்படுத்தப்பட்ட நீர் நிலைகள் என நம் தமிழகத்தில் எண்ணற்ற நீர் நிலைகள் உள்ளன. சென்னை வெள்ளம் மற்றும் தென் தமிழகத்தில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளைப் பார்த்து வருந்திய நமக்கு, நம் முன்னோர்கள் அமைத்த அந்த நீர் நிலைகள் எல்லாம் எங்கே போனது என்ற கேள்வி எழுகிறது.

அந்த நீர் நிலை வகைகள் எவையெவை என்பதை பார்க்கலாம் வாருங்கள்...

அகர வரிசையில்:

 1  அகழி 

 கோட்டையின் வெளியே அமைகப்பட்ட நீர் அரண் (Moat)

அகழி சூழ் போகி (சிலப்.13, 183).

 2 அசம்பு (அசும்பு) 

நீர் கசிந்தோடும் வாய்க்கால். இது மலைப் பகுதியிலும், வயலோரங்களிலும் கசிந்தோடும்.  Water channels near farm lands.

வார் அசும்பு ஒழுகும் முன்றில் - புறம் 113

 3 அருவி

மலை, குன்று போன்றவற்றில் இருந்து வேகத்துடன் விழும் நீர்.  Water falls.

நீர்வீழ்ச்சி என்று சொல்வது தவறு

 4 அயம் அருவி கொட்டுமிடத்தில் பொங்கிக்கொண்டிருக்கும் நீர்நிலை. Spring on a mountain.
 5 அணை

ஆற்றின் குறுக்கே கட்டப்படுவது (Dam) அணை என்றாலே நம் எல்லோருக்கும் உடனே நினைவுக்கு வருவது கரிகால் சோழன் கட்டி இன்றும் கம்பீரமாக நிற்கும் கல்லணை தான்,

தடுப்பணை

அணையை நூக்கிச் சென்றநீர் வெள்ளம் (பெரியபு திருஞான. 723)

 6 அலந்தை

ஒரு வகை குளம். A Tank or pond.

ஆற்று நீர் அலையின் நீர் அலந்தை நீர் எலாம் - தேம்பாவணி

 7 அள்ளல் சேறு பொருந்திய நீர் பள்ளம்.
A pit with muddy waters.
 8 ஆறு

இயற்கையாக அமையப்பெற்ற நன்னீரைக் கொண்ட ஒரு பெரிய நீரோட்டம். River
சிற்றாறு (Rivulet)
காட்டாறு - கட்டற்று ஓடும் ஓர் ஆறு.

காரணப் பெயர்: வழியை அறுத்துக் கொண்டு ஓடுவது ஆறு.

(ஆறு என்பதற்குத் தமிழில் பல பொருள் உண்டு, அவற்றை காண....)

 9  இலஞ்சி 

 பலவற்றிற்கும் பயன் படும் ஓர் நீர் நிலை, முக்கியமாக குடிப்பதற்கு. Reservoir, tank for drinking and other purposes.

இலஞ்சி மீனெறிதூண்டில் (ஐங்குறு. 278).

10 உடுவை ஒரு வகை நீர்நிலை. Pool, a vast sheet of water.
11 உவளகம்

அகழி போன்ற ஓர் நீர்நிலை. Fosse - Ditch dug as a fortification and usually filled with water.

உவளகங் கண்ணுற்றுவர்க்கடலிஃதென (குமர. பிர. திருவாரு. 32)

12 ஊருணி

மக்கள் பருகுவதற்குப் பயன்படும் நீர்நிலை. A water tank/pond used for drinking water.
காரணப் பெயர்: ஊர் உண்பதற்குப் பயன்படும் நீர்நிலை.

ஊருணி நீர்நிறைந் தற்றே உலகவாம்
பேரறி வாளன் திரு. (குறள் எண் : 215)

13 ஊற்று

(நீரூற்று) தண்ணீர் நிலத்துக்கடியே இருந்து வெளியே தோன்றும் பகுதி (இயல்பாயமைந்த நீர் ஊற்று நிலை).  Fountain, spring.

வல்லூற் றுவரில் கிணற்றின்கண் (நாலடி, 263).

14 ஏந்தல் நீர்த் தேக்கம் (Wide shallow pool)
காரணப் பெயர்: வேறு வகையாலன்றி மழை நீரை மட்டும் ஏந்தி நிற்கும் நீர்நிலை.
15 ஏரி

வேளாண்மைத் தொழிலுக்குப் பயன்படும் இயற்கையான நீர் நிலை.  A large lake or reservoir for irrigation.

காரணப் பெயர்: ஏர்த் தொழிலுக்குப் பயன்படும் நீர்நிலை

ஏரியாம் வண்ண மியற்று மிதுவல்லால் (திவ். இயற். 2, 16)

சென்னையில் இருக்கும் ஊர் பெயர்களைப் பார்த்தால் தெரியும் எத்தனை ஏரிகள் இருந்தது என்று.

16 ஏல்வை ஒரு பெரிய நீர்நிலை. Tank; large expanse of water.
17 ஓடை

ஆற்றிலிருந்து பிரிந்து ஓடும் ஒரு சிறு நீர் வழி . A Creek,
காரணப் பெயர்: ஓடும் நீர்

(நீரோடை) (brook)
சிற்றோடை (Brooklet)
விசை நீரோடை (torrent)

18 கடல்

The sea,
அளக்கர் (அளக்க முடியாத நீர் நிலை- கடல்)
ஆழி
சமுத்திரம்
சாகரம்
பரவை
வாரிதி
முந்நீர்
விரிநீர்

(விண்இன்று பொய்ப்பின் விரிநீர் வியனுலகத்து
உள்நின்று உடற்றும் பசி (குறள் எண் : 13)

20  கம்மாய்/கண்மாய்  குளம், ஏரி போன்ற ஒரு பெரிய நீர்நிலை. பாண்டிய மண்டலத்தில் ஏரிக்கு வழங்கும் பெயர்.
காரணப் பெயர்: கண் போன்ற மதகுகளை உடையது 'கண்மாய்.
21 கலிங்கு (கலிஞ்சு)

ஏரி முதலிய பாசன நீர் தேக்கம் உடைப்பெடுக்காமல் இருப்பதற்கு முன் எச்சரிக்கையாக கற்களால் உறுதியாக்கப்பட்டு பலகைகளால் அடைத்து திறக்கக்கூடியதாய் உள்ள நீர் செல்லும் அமைப்பு.
(Weirs - Sluice with many Venturis. A low dam built across a stream to raise its level or divert its flow)

வாட்கண் கலிங்குக டிறந்த (சீவக. 2476).

22 களப்பு கடலில் ஆழமில்லாத இடம். Shallow part of the sea;
23 கழனி வயல், வயலில் உள்ள நீர்.  கழநீர் என்பது கழனி என மருவி விட்டது.
24 கழி

கடல்நீர் பாய்ந்து தேங்கிய நீர்நிலை. Backwater, shallow sea-waters, salt river, marsh;

மாக்கழி மலர்ந்த நெய்தலானும் (புறநா. 48, 3)

25 கழிமுகம்

ஆறு கடலொடு கலக்கும் சங்கமுகம் (Estuary, firth)

உப்பங்கழி - Saltpan
அல்குகழி - சிற்றாறு .

26 கயம்

சமவெளியில் ஆறு பாய்ந்து நிரம்பும் நீர்நிலை.  A kind of lake in the plain land.

துணிகயந் துகள்பட (மணி. 24, 84)

27 கரணை நீர் தேங்கியிருக்கும் ஒரு வகை சதுப்பு நிலம். (Marsh land)
சென்னைக்கு அருகே தற்போதைய மழை வெள்ளத்தால் அதிகம் பாதிக்கப்பட்ட பகுதி - பள்ளிக்கரணை. ஏன் என்று நமக்கு இப்போது நன்றாகப் புரியும்.
28 காயல் கடலையடுத்த உப்புநீர்ப் பரப்பு. (Backwater / lagoon)
29 கால்

நீரோடும் வழி (Channel)

சரயவும் பலகாலி னோடியும் (கம்பரா. நாட்டுப் 60).

30 கால்வாய் ஏரி, குளம், ஊருணி இவற்றிற்கு நீர் செல்லும் வழி (Suppy channel to a tank)
31 கிடங்கு

ஒரு வகை குளம். A kind of Pond, tank.

பூங்கிடங்கினீள்கோவல் (திவ். இயற். முதற். 77).

32 கிணறு

கேணி (Well)
ஆழிக்கிணறு (நாழிக்கிணறு) - கடலுக்கு அருகே தோண்டிய/கட்டிய கிணறு (Well in Sea-shore)
உறைகிணறு - (Ring Well) மணற்பாங்கான இடத்தில் , (பெரும்பாலும் ஆற்றங்க்கரையில்) தோண்டப்பட்ட கிணறு
தொடுகிணறு - ஆற்றில் அவ்வப்பொழுது மணலை தோண்டி நீர் எடுக்கபடும் இடம் (Dig well)
பிள்ளைக்கிணறு - குளம், ஏரியின் நடுவே அமைந்த கிணறு (Well in middle of a tank)
பொங்குகிணறு - ஊற்றுக்கால் கொப்பளித்துக்கொண்டே இருக்கும் கிணறு (Well with bubbling spring)
நடைக்கிணறு - (Large well with steps on one side) இறங்கிச் செல்லும் படிக்கட்டமைந்த பெருங் கிணறு
கட்டுக்கிணறு - சரளை நிலத்தில் வெட்டி, கல், செங்கல் இவைகளால் சுவர்கட்டிய கிணறு.
ஆழ்கிணறு - மிகவும் ஆழமான கிணறு. draw-well,

கிணறுவெட்ட பூதம் கிளம்பியது - என்று கிராமங்களில் ஒரு சொலவடை உண்டு.

33 குளம்

செயற்கையான நீர்த் தேக்கம், குளிக்கப்பயன்படும் நீர் நிலை. (A tank, a pond)
காரணப் பெயர்: குளிப்பதற்குப் பயன்படும் நீர்நிலை 'குளம்'

குளக்கீழ் விளைந்த களக்கொள் வெண்ணெல் - (புறநா. 33, 5).

34 குட்டை சிறு குளம். குடிநீருக்காக இன்றி வளர்ப்பு விலங்குகளைக் குளிப்பாட்டுவதற்காகத் தேக்கப்படும் நீர். small pond;

ஒரே குட்டையில் ஊறிய மட்டை என்பது ஒரு பழமொழி. கிராமப்புறங்களில் தென்னை மட்டையை கிடுகு பின்னுவத்தற்காக குட்டை நீரில் ஊறப்போடும் செயல்.
35 குட்டம்

பெரிய குளம் (Large Pond)

இருமுந்நீர்க் குட்டமும் (புறநா. 20, 1)

36 குண்டம்

குளிப்பதற்காக சிறிதாய் அமைக்கப்பட்ட நீர் நிலை (Small Pool)

37 குண்டு

குளிப்பதற்கேற்ற சிறு குளம் (A pool, a basin of water)

38 குமிழி நிலத்தில் பாறையை குடைந்து அடி ஊற்றை மேலெழும்ப வரச்செய்யும் கிணறு (Rock cut Well)
40 குமிழி ஊற்று அடி நிலத்து நீர் நிலமட்டத்துக்கு கொப்பளித்து வரும் ஊற்று (Artesian fountain)
41 குழி பள்ளம் போன்ற ஒரு நீர் நிலை.
42 கூவம்

ஒழுங்கில்லாத நீர் நிலை. (சென்னையில் உள்ள கூவம் நதிக்கு நன்றாக பொருந்துகிறது). கிணறு. Well;

கூவத்தின் சிறுபுனலைக் கடலயிர்த்த தொவ்வாதோ (கம்பரா. வீபீடண. 103).

43 கூவல்

நீர் தேங்கியிருக்கும் ஆழம் அதிகமில்லாத பள்ளம் (Hollow Well)

கூவலன்ன விடரகம் (மலைபடு. 366).

44 கேணி அகலமும் ஆழமும் உள்ள பெருங்கிணறு. Well.
45 கோட்டகம்

ஆழமான நீர்நிலை. Deep tank.

கோட்டக நிலைப்படா நிறைந்தன (சீவக. 41)

46 சதுப்பு நிலம்

 சேற்றுநிலம். Marsh land

47 சுனை

மலையில் இயற்கையய் அமைந்த நீர் ஊற்று (Mountain Pool)

பூவமன்றன்று சுனையுமன்று. (கலித்.55)

48 சிறை

தேக்கப்பட்ட பெரிய நீர் நிலை (Reservoir)  நீர் எங்கும் ஓடிவிடாமல் சிறை வைக்கப்பட்டுள்ளது :-)

வான் சிறை மதகுகள் (கம்பரா. அகலிகை. 64.)

49 சூழி

மலை போன்று உயர்மான இடத்தில் உள்ள ஒரு வகை நீர்நிலை. Pool. pond in hilly tracts

அலங்குகதிர் சுமந்த கலங்கற்சூழி (புறநா. 375)

50 சேங்கை பாழடைந்த நீர்நிலை. பாசிக்கொடிகள் மண்டிய குளம் (Tank with Duck Weed)
51 பட்டம்

ஒரு வகை நீர்நிலை. Tank, pond;

நீர்ப்புனற் பட்டமும் (சீவக 868)

52 படு

ஆழமான குளம். Deep pool;

பனிநீர்ப் படுவிற் பட்டினம் படரின் (சிறுபாண். 153)

53 படுகர்

நீர்நிலை பள்ளம். Pit with water.

தான்விழும் படுகர் வீழ்த்தான் (குற்றா. தல. புட்பகந்த. 16)

54 படுகை

நீர் தேங்கி இருக்கும் ஓரிடம். ஆற்றுப்படுகை Reservoir of water;

பழைய பாகீரதிப்படுகைமேல் (திருப்பு.493).

55 பயம்பு

பள்ளம். பள்ளத்தில் தேங்கி இருக்கும் நீர். Hollow pit with water

கரந்து பாம்பொடுங்கும் பயம்பு (மலைபடு.199)

56 பண்ணை மருத நிலத்தில் ஓடை போல் ஓடும் நீர்நிலை. Agricultural tract with water;
57 பணை வயல் அருகில் உள்ள நீர்நிலை. Agricultural tract with water;
58 பல்வலம் சிறுகுளம். a small pond,
59 புனல் ஆறு போன்று ஓடும் நீர் நிலை. Flood, torrent, stream, river.

மழைகொளக் குறையாது புனல்புக மிகாது (மதுரைக். 424)
60 புனற்குளம் மழை நீரால் மட்டும் நிரம்பி இருக்கும் குளம். A pond or tank filled only with rain water
61 பெருங்கடல் சமுத்திரம். பெரிய கடல். Ocean
62 பொய்கை

இயற்கையிலுண்டான நீர்நிலை, நீரூற்று உடையது. Natural spring or pond

பொய்கைவாயிற் புனல்பொரு புதவின் (பதிற்றுப். 27).

 63  தடம் 

குளிப்பதற்காக அழகாக கட்டப்பட்ட ஒரு குளம் (Beautifully Constructed Bathing Tank)

64

 

தடாகம் 

ஒரு குளம். Pond,

சங்கொலியுண்டாக்குந் தடாகமே (பணவிடு.268).

65 தருவை பெரிய ஏரி. Big lake.
66 தளிக்குளம் கோவிலின் நாற்புறமும் அகழி போல் அமைந்த நீர் நிலை. Tank Surrounding a Temple.
67 தாங்கல் தொண்டை மணடலத்தி அமைந்துள்ள ஏரிகள். பாசனத்துக்கு உபயோகப்படும் இயற்கையேரி. (Irrigation tank)
(ஐயப்பன்தாங்கல், ஈக்காட்டுத்தாங்கல், வேடந்தாங்கல் என்ற ஊர்பெயர்கள் காரணம் புரிகிறது)
68 திருக்குளம்  - கோவில் உள்ளே அமைந்த குளம் (புஷ்கரணி)  Temple tank.
69 துரவு பாசனத்துக்கு உதவும் பெருங்கிணறு. தோட்டஞ் செய்வதற்காககத் தோண்டப்பட்டவை
தோட்டந்துரவு என்ற சொற்றொடர் கேட்டிருக்கிறோம் அல்லவா.
70 தெப்பக்குளம்

கோவில்களில் உள்ள குளம், தெப்பம் சுற்றி வரும் (Temple tank with inside pathway along parapet wall, in which the deity is floated on rafts during festival;

தெப்பக்குளங் கட்டித்தேர்மண்டபங் கட்டி (குற்றா.குற.91, 4)

71 மடு

ஆற்றுக்கு நடுவில் உள்ள அபாயகரமான பள்ளம். Deep place/pool in a river or channel.

ஆறிடுமேடு மடுவும்போ லாஞ்செல்வம் (நல்வழி, 32).

72 மடை

ஒரு கண்ணுள்ள சிறு மதகு (Small sluice with single venturi) மடை திறந்த வெள்ளம் என்று சொல்வார்கள்.

உழவருடைத்த தெண்ணீர் மடை (தஞ்சைவா. 151).

இந்த மடையை திறப்பது மிகவும் கடினமான ஆபத்தான செயல். உயிருக்கு உத்தரவாதம் இல்லாத ஒரு பணி. இதை
செய்பவர்களை தான் 'மடையர்' என்று அழைக்கப்பட்டார்கள். ஆனால் இன்று மடையர் என்றால் முட்டாள் என்று
பொருள் ஆகிவிட்டது, ஒருவேளை, தெரிந்தே தன் உயிரை பனையம் வைத்து மடையை திறப்பவன், என்பதால் கூட
இப்படி மாறியிருக்கலாம்.

73 மதகு பல கண்ணுள்ள ஏரி/அணை நீர் வெளிப்படும் இடம் (Sluice with many venturis)
74 மறுகால் அதிக நீரை வெளியேற்றும் பெரிய வாய்க்கால். (Surplus water channel)
75 முகத்துவாரம் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட ஆறுகள் அல்லது சிற்றாறுகள் கலப்பதும்,  கடலுடன் தொடர்புடையதுமான, கரையோர நீர்ப்பரப்பு. Estuary, Mouth of a firth or river.
76 மூழி ஒரு வகை நீர்நிலை. Reservoir of water; tank;
77 மோட்டை நீர் கசிந்து வெளியேறும்படி வயல் வரப்புத் துவாரப்பட்டிருக்கை. Porosity of the ridge of a field;

மோட்டை போனால் கோட்டைபோகும் - பழமொழி.
78 நதி

கிழக்கி நோக்கி ஓடும் ஆறு.  East flowing river.

79 நளினி தாமரைப் பொய்கை/தாமரைத் தடாகம். Lotus tank.
80 நீர்த்தாரை ஒரு வகை நீரோட்டம். A fountain.
81 நீராவி மைய மண்டபதுடன் கூடிய பெருங்குளம் (Bigger tank with center Mantapam)
(பொதுவாக நீர் வெப்பத்தினால் ஆவியாக மாறுவதை நீராவி என்போம், ஆனால் குளம், தடாகம் என இன்னொரு பொருளும் இருக்கிறது)
82 வலயம் வட்டக் குளம் (Round tank)
83 வாய்கால்

ஏரி முதலிய நீர் நிலைகளில் இருந்து நீர் செல்லும் வழி (Small water course)

வல்லான் வகுத்ததே வாய்க்கால் - பழமொழி
வாய்க்கால்ல போன போன கழுதைய அதன் போக்குலேயே விட்டுப்புடிக்கணும் - பழமொழி

84 வாளி ஆற்று நீர் தன் ஊற்று நீரால் நிரப்பி மறுகால் வழி அதிக நீர் வெளிச்செல்லுமாறு அமைந்த நீர் நிலை (stream)
85 வாவி சிறு தடாகம். (Tank)

 

(கடைசியாக - சாக்கடை. எல்லா ஊரிலும் வற்றாமல் வருடந்தோறும் ஓடுவது இது ஒன்று தான். நீர் என்றால் நீல நிறம் என்ற கூற்றை பொய்யாக்கிய ஒன்று)

குறிப்பு: இந்த பட்டியலில் ஏதாவது பெயர்கள் விட்டுப்போயிருந்தால், கீழே கருத்துப்பகுதியிலோ அல்லது மின்னஞ்சல் மூலமாகவோ தெரிவிக்கவும். நன்றி.

நீர் சேமித்து வைக்கும் இடங்களுக்கு இத்தனை சொற்கள் உண்டா என்று வியப்பாக இருக்கிறது அல்லவா? இதில் விடுபட்ட ஒரு சொல், தமிழகத்தில் 'தண்ணி' அதிகம் கிடைக்கும் ஒரு இடத்தைக்குறிக்கும் சொல், அது என்ன என்று உங்கள் யூகத்திற்கே விட்டுவிடுகிறேன் :-)

waterbodies 1waterbodies 2waterbodies 3



இன்றைய சூழ்நிலையில் தமிழ்நாட்டைப் பொறுத்த அளவில் ஏரி, குளம், குட்டைகளின் எண்ணிக்கை குறைந்து கொண்டே வருகின்றன. பல நீர் நிலைகள் தூர்ந்து போய்விட்டன. பல தூர்க்கப்பட்டுவிட்டன. பல பெரிய ஏரிகள் தனியார் ஆக்கிரமிப்பினால் சிறிய ஏரிகளாகி விட்டன. சில சிறிய ஏரிகள் காணாமலே போய் விட்டன. இதனால் நீர் தேங்குவதற்கு வழியே இல்லாமல் போய்விட்டது. நகரத்தை ஒட்டிய ஏரி, குளங்களெல்லாம் தூர்க்கப்பட்டு குடியிருப்புகளாக மாறிவிட்டன. அரசாங்கமே பல நகரங்களில் குளம் மற்று ஏரிகளை தூர்த்து பேருந்து நிலையம், வணிக கட்டிடங்கள் என மாற்றிவிட்டது. அதனால் மழை பெய்தால் தரையில் ஓடி, குடியிருப்புகளில் நுழைந்து, பள்ளத்தில் தேங்கி வீணாகிறதே ஒழிய, நிலத்தடி நீர் பெருகுவதற்கு ஏற்ப ஏரி குளங்களில் நீர் தேங்கும் வாய்ப்பு இல்லாமல் போய்விட்டது. இந்த மழை வெள்ள அனுபவத்தில் இருந்து இனியும் பாடம் கற்கவில்லை என்றால், இனி ஒவ்வொரு வருடமும், இந்த இன்னல்கள் தொடரும்.

அரசாங்கம் மட்டுமல்ல பொதுமக்களும், சுற்றுச்சூழலை மதித்து, அதனை காக்கவில்லையெனில், இது போன்ற துன்பம் தொடர்கதை தான்.

அன்று,
ஆறு நிரம்பி, ஏரி நிரம்பியது
ஏரி நிரம்பி, கண்மாய் நிரம்பியது
கண்மாய் நிரம்பி, கரணை நிரம்பியது
கரணை நிரம்பி, தாங்கல் நிரம்பியது
தாங்கல் நிரம்பி, ஏந்தல் நிரம்பியது
ஏந்தல் நிரம்பி, ஊருணி நிரம்பியது
ஊருணி நிரம்பி, குளம் நிரம்பியது
குளம் நிரம்பி, குட்டை நிரம்பியது
குட்டை நிரம்பி பல உயிரனங்கள்
வயிறு நிரம்பியது - ஆனால் இன்று?
மழை வந்தால் ஊரே நிரம்புகிறது
கோடை வந்தவுடன் வறட்சி நிலவுகிறது!
இனிமேலாவது
நீர் நிலைகளை மீட்டெடுப்போம்
நீர் நிலைகளைப் பாதுகாப்போம்!

நன்றி
இராம்ஸ் முத்துக்குமரன்.

தொடர்புடைய கட்டுரைகள்

Sunrise in the beach

திரைகடல் கரைதனில்...

Tsunami, 26 Dec 2004

சுனாமி (26, டிசம்பர், 2004)

Water

தண்ணீர்... தண்ணீர்...

உங்கள் மின்னஞ்சல் தேடி செய்திமடல் வர‌

என்னைப் பற்றி

எனது பெயர் இரா(ம்ஸ்) முத்துக்குமரன்.  தமிழின் பால் கொண்ட பற்றினாலும், தமிழ் மொழியின் மேன்மை மற்றும் சிறப்பினை அனைவருடனும் பகிர்ந்து கொள்ளவும் இந்த இணையத்தளத்தை தொடங்கியுள்ளேன்.

தொடர்பு கொள்ள‌

இத்தளத்தில் நிறை குறைகள் இருந்தால், நிறைகளை மற்றவர்களுக்கும், குறைகளை என்னிடமும் தெரிவிக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். என்னை தொடர்பு கொள்ளவேண்டிய மின்னஞ்சல் முகவரி admin@thamizharuvi.com அல்லது admin@thamizharuvi.net