Chidhambaram Natarajar Temple

River

ஆறு

நம் தமிழ் வளமான மொழி என்பது நம் அனைவருக்குமே தெரியும். அது சொற்களின் களஞ்சியம். வார்த்தைகளின் வயக்காடு. அள்ள அள்ள குறையாத அட்சய பாத்திரம். இன்றைய விஞ்ஞான வளர்ச்சிக்கும் ஈடுகொடுத்து வார்த்தைகளை தேடிக்கொடுத்துக் கொண்டேயிருக்கிறது.

அப்படி பட்ட சிறப்பு வாய்ந்த நம் தமிழ் மொழியில் பல பொருள் தரும் சொற்கள் உள்ளன. ஒரு சொல் பல பொருள் தரும். அதே போல் ஒரு பொருளுக்குப் பல சொற்கள் உள்ளன.

எடுத்துக்காட்டாக, "சொல்" என்ற பொருள் தரும் ஒரு சொல்லுக்கு கிட்டத்தட்ட முப்பது சொற்கள் இருக்கின்றன. அதை பற்றி கட்டுரையை இங்கு படிக்கலாம்.

அப்படி பல பொருள் தரும் ஒரு சொல்லை தான் இன்று பார்க்கப் போகிறோம். அந்த சொல் ஆறு. ஆறு எனும் சொல்லுக்கு என்னென்ன பொருள் உள்ளது என்பதை கீழே பார்க்கலாம்:

ஆறு - 6 எனும் எண்
ஆறு - நதி
ஆறு - வழி/உபாயம்/விதம்
ஆறு - இயல்பு
ஆறு - பக்கம்
ஆறு - அறம்
ஆறு - பயன்
ஆறு - சமயம்
ஆறு - தணி

இந்த "ஆறு" எனும் ஒரு சொல்லைக் கொண்டு வாரியார் சுவாமிகள் தமிழோடு விளையாடியதை தான் இன்று பார்க்கப் போகிறோம். உள்ளத்துயரோடு தம்மை சந்திக்க வந்த ஒருவருக்கு, இறைவனை வணங்கி வேண்டினால், உன் துயரெல்லாம் விலகும் என்று சொன்னார். ஆனால் அதை தமக்கே உரிய பாணியில் சொன்னார் தீவிர முருக பக்தரான வாரியார் சுவாமிகள். எப்படி?

முருகனுக்கு ஆறுதலை
அவன் அப்பன் அந்த
சிவனுக்கும் ஆறுதலை
அவர்களை வேண்டிக்கொள்
தருவார்கள் உனக்கு ஆறுதலை

என்று ஆறு எனும் ஒரு சொல்லை மூன்று பொருள் தரும் வண்ணம் தமிழோடு விளையாடி விடை கூறினார்.

முதல் ஆறு - எண். ஆறுமுகம் கொண்ட முருகனுக்கு இருப்பது ஆறு தலை
இரண்டாம் ஆறு - நதி. சிவபெருமான் தலையில் கங்கை ஆறு இருப்பதை குறிக்கிறது இந்த இரண்டாவது ஆறு
மூன்றாம் ஆறு - தணிப்பது/ஆற்றுவது

 

இதே போல் கவியரசர் கண்ணதாசனும் ஆறு எனும் ஒரு சொல்லைக் கொண்டு ஒரு அழகான பாடலை அமைத்துள்ளார். உங்கள் எல்லோருக்கும் தெரிந்த பாடல் தான் அது. "ஆண்டவன் கட்டளை" என்ற திரைப்படத்தில் வரும் அந்த பாடல்:

ஆறு மனமே ஆறு - அந்த
ஆண்டவன் கட்டளை ஆறு
சேர்ந்து மனிதன் வாழும் வகைக்கு
தெய்வத்தின் கட்டளை ஆறு

அமைதியாகு மனமே, நீ அமைதியாக ஆண்டவன் ஆறு கட்டளைகள் தருகிறார் என்ற பொருளில் தான் கவியரசர் பாடியிருக்கிறார். ஆனால் நாம் இன்னும் சில பொருளில் கூட அதை பொருத்திப் பார்க்கலாம்.

அமைதி பெறு மனமே, அதற்கு ஆறு (வழி) இருக்கிறது. ஆண்டவனின் ஆறு கட்டளைகள் இருக்கிறது.
ஆறு போல் அலைபாயும் மனமே, அமைதி பெறு, அதற்கு ஆறு ஆண்டவன் கட்டளைகள் இருக்கிறது
ஆறாக உடைந்து இருக்கும் மனமே, மீண்டும் ஒன்றாக மாறி, அமைதி பெறு, அதற்கு ஆறு ஆண்டவன் கட்டளைகள் இருக்கிறது
ஆறு (6) மனமே ஆறு (6) , ஆண்டவனுடைய கட்டளை ஆறு இருக்கிறது தெரியுமா?

இவ்வாறு (இதிலும் ஒரு ஆறு இருக்கிறது) எப்படி பார்த்தாலும் நல்ல பொருள் தருகிறது கவியரசரின் பாடல்.

ஆண்டவன் கட்டளையாக கண்ணதாசன் அவர்கள், இப்பாடலில் சொன்ன ஆறு கட்டளைகள் இதோ:

1) ஒன்றே சொல்வார் ஒன்றே செய்வார்
உள்ளத்தில் உள்ளது அமைதி

சொல்லுக்கு செய்கை பொன்னாகும்

2) இன்பத்தில் துன்பம் துன்பத்தில் இன்பம்
இறைவன் வகுத்த நியதி

வரும் துன்பத்தில் இன்பம் பத்தாகும்

3) உண்மையைச் சொல்லி நன்மையைச் செய்தால்
உலகம் உன்னிடம் மயங்கும்

உண்மை என்பது அன்பாகும்

4) நிலை உயரும் போது பணிவு கொண்டால்
உயிர்கள் உன்னை வணங்கும்

பெரும் பணிவு என்பது பண்பாகும்

5) ஆசை கோபம் களவு கொள்பவன்
பேசத்தெரிந்த மிருகம்

மிருகம் என்பது கள்ள மனம்

6) அன்பு நன்றி கருணை கொண்டவன்
மனித வடிவில் தெய்வம்.

உயர் தெய்வம் என்பது பிள்ளை மனம்

என்ன அருமையான வரிகள். கண்ணதாசன் கண்ணதாசன் தான்.

தமிழ் மொழியில் ஆறுக்கு இன்னொரு ஒரு சிறப்பு இருக்கிறது. தமிழிலக்கியத்தில் ஆற்றுப்படுத்துதல் என்றே ஒரு வகை இருக்கிறது.
அதற்கு ஆற்றுப்படை என்று பெயர் (இந்த ஆற்றுப்படை தான் மருவி அறுபடை என்று ஆகியது). அதாவது வழிப்படுத்துதல் அல்லது வழிகாட்டுவது என்று பொருள். மன்னர்களிடம் பரிசு பெற்ற புலவர்கள், வறுமையில் வாடும் மற்ற புலவர்களுக்கு வழிக்காடுவதாக பாடப்பட்ட பாடல்கள். அதேபோல் இறைவனை அடைய வழிகாட்டும் பாடலாகவும் பாடப்பட்டுள்ளது. தமிழில் உள்ள சில ஆற்றுப்படைகள் இதோ:

  • சிறுபாணாற்றுப்படை
  • பெரும்பாணாற்றுப்படை
  • திருமுருகாற்றுப்படை
  • பொருநராற்றுப்படை

 

மீண்டும் இன்னொரு பதிவில் சந்திப்போம்.

அன்புடன் என்றும்
இராம்ஸ் முத்துக்குமரன்.

 

தொடர்புடைய கட்டுரைகள்

Water bodies names in Tamil

நீர் நிலைகள்

Chennai Rain Dec 2023

இது ஒரு தொடர்கதை...

Chennai Rain Nov 2023

சென்னை மழை

உங்கள் மின்னஞ்சல் தேடி செய்திமடல் வர‌

என்னைப் பற்றி

எனது பெயர் இரா(ம்ஸ்) முத்துக்குமரன்.  தமிழின் பால் கொண்ட பற்றினாலும், தமிழ் மொழியின் மேன்மை மற்றும் சிறப்பினை அனைவருடனும் பகிர்ந்து கொள்ளவும் இந்த இணையத்தளத்தை தொடங்கியுள்ளேன்.

தொடர்பு கொள்ள‌

இத்தளத்தில் நிறை குறைகள் இருந்தால், நிறைகளை மற்றவர்களுக்கும், குறைகளை என்னிடமும் தெரிவிக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். என்னை தொடர்பு கொள்ளவேண்டிய மின்னஞ்சல் முகவரி admin@thamizharuvi.com அல்லது admin@thamizharuvi.net