அன்று ஒரு சுவாதி.. இன்று ஒரு சத்யா... இன்னும் பெயர் தெரியாத எத்தனை எத்தனை பெண்கள்... இனிமேலும் எவ்வளவு காலத்திற்கு இப்படி காதல் என்ற பெயரில் பலியாகப் போகிறார்கள்? இந்த நிலைக்கு யார் காரணம்?
இது
காதல் படுத்தும் பாடா?
இல்லை
காதல் படுகின்ற பாடா?
காதல் கொள்ளுதல் தெரியும்
இது என்ன
காதலால் கொல்லுதல்?
காதலுக்காக
காதலிக்காக
உயிரைக் கொடுத்தவர்கள் பற்றி
அறிந்திருக்கிறோம்
படித்திருக்கிறோம்,
காதலுக்காக
காதலி உயிரை எடுப்பது
காதலின் புது பரிணாமமா?
காதலின் அர்த்தம் தெரியாத
அறிவீனமா?
இல்லை புதியதோர்
மன ஊனமா?
அரக்க குணம்
படைத்தவனையும்
அகிம்சைவாதியாய் மாற்றும் காதல்
எப்படி மனிதனை
மிருகமாய் மாற்றியது?
அன்பை அல்லவா
காதல் போதிக்கும் - அது
அன்பில் அல்லவா
எல்லாம் சாதிக்கும்?
இது உண்மைதானே
எல்லா சமய சாதிக்கும்?
இன்னும் உணராவிட்டால்
வரும் தலைமுறை யல்லவா
பாதிக்கும்?
காதல் என்ற பெயரில் நடக்கும்
எல்லா அநீதிக்கும்,
தண்டனை கடுமையாய் இல்லையென்றால்
இனி வரும் காலமெல்லாம்
இது நீடிக்கும்!
பசுந்தோல் போர்த்திய
புலிகளாய்,
காதல் போர்த்திய
வெறி கொண்ட விலங்குகளாய்
மாறிப் போனதேன்?
காமம் கொண்டு
காமுறுவர் - இவர்கள்
காதலெனும் பெயரில்
ஒளிந்துள்ள காமுகர்கள்
விட்டுக் கொடுப்பதல்லவா
உண்மைக் காதல்?
துண்டு துண்டாய்
வெட்டி உயிரெடுக்க
எப்படி மனம் வந்தது?
அத்தகைய மனதில்
காதல் எங்ஙனம் துளிர்விடும்?
தண்டவாளத்தில்
தள்ளிவிட்டு கொன்ற
கொடியவனுக்கு
தண்டு வடம் உடைத்தல்லவா
உடனே
தண்டிக்க வேண்டும்,
கருணை மொழி பேசும்
அருமை காதல்
கர்ணகொடூரமாய் பழிவாங்கும்
சிறுமையான தெப்படி?
'வதனமே சந்திர பிம்பம்'
என பாடினர் கவிகள்,
அந்த அழகிய முகத்தை
பொசுக்கிட
எப்படி எண்ணம் வருகிறது?
மெய்க்காதல் தருவது
அமிழ்தம் அல்லவா?
இவர்களுக்கு மட்டும் எப்படி
அழிக்கின்ற
அமிலம் ஆனது?
ஒருவர் வாழ்க்கையை
சிதைத்து அழித்த பின்
எப்படி இவர்களால்
சிரித்து வாழ முடிகிறது?
காதல் என்ற பெயரில்
உடலை வதைப்பதும்
முகத்தை சிதைப்பதும்
வாழ்வைக் கெடுப்பதும்
உயிரை எடுப்பதும்,
யார் விதைத்தது
இவர்கள் மனதில்
இக்கொடிய நஞ்சை?
இன்னும் என்னென்ன நேருமோ
என பதற வைக்கிறதே
நல்லவர் நெஞ்சை!
இந்த சீரழிவுகளுக்குக்
காரணங்கள் பல இருக்கலாம்
நாம் முயன்றால்
ஒவ்வொன்றாய் வேரறுக்கலாம்,
இவற்றில்
முதலில் முந்தி நிற்பது
திரைப்படங்களும் ஊடகமும்
இவற்றால்
சந்தி சிரிக்குது - நம்
கலாச்சாரமும் தாயகமும்,
வெறும்
பொழுதுபோக்காய் வந்தது
இன்றோ நமைவிட்டு - எப்
பொழுதும் போகாமல்
போதையூட்டி
அடிமைப் படுத்திவிட்டது,
கடைந்தெடுத்த பொறுக்கியை
காதலிக்கும் கதாநாயகி,
போதையும் புகையுமாய்
இருக்கும் கதாநாயகர்கள்,
மரியாதை மரித்துப்போன
வசனங்கள்,
புரியாத அல்லது
காதுகொடுத்து கேட்க
முடியாத பாடல்கள்,
கவர்ச்சி என்ற பெயரில்
உணர்ச்சியைத் தூண்டும்
காட்சிகள்,
நாட்டில் நடைபெறும்
பெரும்பாலான
சீரழிவுக்கு இவைகளே
சாட்சிகள்!
பள்ளி மாணவர்கள் - இளம்
பதின்பருவ காதலர்கள் என திரைப்
படங்களில் பார்த்து பார்த்து
நல்ல மாணவர்களின்
உள்ளம் கூட
தடுமாறி தடம்மாறும்
மெல்ல மெல்ல!
இளைஞர்களை
சிந்திக்க முடியாமல் செய்வது
அவர்களின் தந்திரம்
சிந்திக்க முடியாமல்
கற்பனை உலகில் வாழ்கிறார்கள்
இவர்களும் தினந்தினம்!
ஆபாசமும் வன்முறையும்
திரைப்படங்களில் மறைந்தால் - நல்ல
கலாச்சாரமும் தலைமுறையும் - இனி
வருங்காலங்களிம் மலரும்!
ஒரு பெண்
தனக்கு கிடைக்கவில்லை
என்பதற்காக
அவ்வுயிரை எடுக்க
யார் கொடுத்தது அதிகாரம்?
பண பலத்தாலும் - சாதிமத
பின் புலத்தாலும்
தப்பிவிட முடியும்
என்ற அகங்காரம்,
சாராய வருமானத்தில்
மூழ்கியிருக்கும் அரசாங்கம்,
விழித்தெழுந்து
சமூக சீரழிவை
தடுக்க வேண்டியது
காலத்தின் கட்டாயம்!
கூட்டுக்குடும்பமாய்
வாழ்ந்த போது
நிகழ்ந்ததில்லை
இத்தகைய கொடூரங்கள்,
அறிவுரை சொல்ல
ஆளில்லாமல் வளரும்
இளம் தலைமுறையினர்,
சரிவர வழிநடத்தபடாமல்
கால்போன போக்கில் போகும்
கட்டவிழ்ந்த மிருகமாயினர்,
அன்று காதல்
கோழையை வீரனாக்கியது
இன்று அது
கொலைகாரன் ஆக்க
யார் காரணம்?
அன்று
ஏழைக்கு ஊக்கம் தந்து
உயர வைத்தது,
இன்று காதல் என்ற பெயரில்
ஏமாற்றும் வித்தை
யார் கற்றுத் தந்தது?
இன்றைய காதலுக்கு
வரைமுறை இல்லை
என்று ஆகிவிட்டது,
வரம்பு எல்லை
மீறி விட்டது,
முறையில்லா காதல்களினால்
சமூகம் கறைபடிந்து
புரையோடி விட்டது,
காதல் என்றால் கண்ணியம்
என்ற நிலை மாறிவிட்டது!
களங்கமுடைய ஒரு சிலரால்
காதல்
களங்கமடைந்து விட்டது,
கலங்கரை விளக்கமாக
இருக்கும் காதல்
கரை சேர
வழிகாட்டுமே அன்றி
வலி கூட்டுமா?
பெண்கள்
கவனமாக இருக்க வேண்டும்
என்ற நம் கலாச்சாரம்
அடக்குமுறை அல்ல
நேரும் பல ஆபத்துகளை
தடுக்கும் முறை!
கட்டுப்பாடற்ற சுதந்திரம்
முதலில் சுகம் தரும்,
கடிவாளம் போடாவிட்டால்
அதுவே வாழ்வை
மெல்ல சிதைத்திடும்!
"எந்த குழந்தையும்
நல்ல குழந்தை தான்
மண்ணில் பிறக்கையிலே,
அது நல்லவனாவதும்
தீயவனாவதும்
அன்னை (பெற்றோர்) வளர்ப்பதிலே"
எத்தனை உண்மையான வரிகள்
எல்லோரும் உணர்ந்தால் மறையுமே
இனியுமிது போன்ற வலிகள்!
வலியுடன்
இராம்ஸ் முத்துக்குமரன்.