நம் மொழி
செம்மொழி தான்,
ஏன் தெரியுமா?
எம் மொழி
எம் மொழியையும் வெறுக்காது,
என் மொழி
எந்நாளும் அழியாது,
எவராலும் அழிக்க முடியாது!
செம்மொழி இருக்க
மும்மொழி எதற்கு?
என்று கேட்பவர்களே,
ஆங்கிலம் என்ன உங்கள்
அன்னை மொழியா?
தமிழெனும் செம்மொழி இருக்க
அயல் நாட்டு ஆங்கிலம் எதற்கு?
என்று
ஏன் கேட்கவில்லை?
கேட்கக் கூட தோன்றவில்லை?
தமிழ் மொழியே
மும்மொழி தானே?
முத்தமிழ் அல்லவா
இயல் இசை நாடகம்?
மொழியை வைத்து - இன்னும்
ஏன் இந்த நாடகம்?
அந்நிய மொழியை
ஆராதிப்பவர்களால் - நம்
இந்திய மொழிகளை
ஏற்றுக்கொள்ள முடியாதா?
புதிய கல்விக்கொள்கையில்
இந்திய மொழிகள்
என்று தானே இருக்கிறது,
இந்திய மொழிகள்
என்று சொன்னாலே
உங்களுக்கு
இந்தி மட்டும் தான்
நினைவுக்கு வருகிறதா?
இது வெறும் ஒரு
பாஷை மீதான வெறுப்பா? - இல்லை
தேசம் மீதான வெறுப்பா?
புதியதாய் ஒரு மொழி கற்றால்
குடியா மூழ்கி போய்விடும்?
இங்கு
வற்றாத ஆறாக ஓடும்
குடியால் அழிந்தவர்களே தான் அதிகம் - ஒரு
மொழியால் எதுவும் அழிந்துவிடாது!
ஏற்றத் தாழ்வை
களைவது தானே கல்வி?
கல்வியில் ஏன் இன்னும்
ஏற்றத் தாழ்வு?
தனியார் பள்ளிகளுக்கு
தனி மதிப்பு,
அரசு பள்ளிகளுக்கு மட்டும்
ஏன் இந்த அவமதிப்பு?
புதிதாய் ஒரு மொழி கற்கையில் - அவனுக்குள்
புதிதாய் ஒரு மனிதன் பிறக்கிறான்,
புதிதாய் ஓர் உலகம் அறிமுகமாகும் - அது
புதிய ஓர் அனுபவ அறிவுமாகும்!
'செப்புமொழி பதினெட்டுடையாள்
எனில் சிந்தனை ஒன்றுடையாள்..'
என்று
பாரதத்தாயைப் போற்றி பாடினான்
மஹாகவி பாரதி,
பல மொழி கற்றதால் தான்
உறுதியோடும் பெருமையோடும்
'யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல்
இனிதாவ தெங்குங் காணோம்'
என்று அவனால் பாட முடிந்தது,
சென்ற நூற்றாண்டில் பல மொழி
பாரதியால் கற்கமுடிந்தது,
இந்த இருபத்தியொன்றாம்
நூற்றாண்டில் - மாணவர்கள்
புது மொழி கற்பதில் என்ன வலி?
புது மொழி கற்பதற்கு என்ன வழி?
பல மொழிகள் கற்ற
பாரதி கூட
'சுந்தர தெலுங்கு' என்று
பிற மொழிகளையும் போற்றினார்
எந்த மொழியையும் தூற்றவில்லை!
உங்களுக்கு
பிறமொழிகள் மீது
ஏன் இத்தனை வெறுப்பு?
வெறுப்பை உமிழ்கிறவர்கள் மீது
அல்லவா வரும்
அனைவருக்கும் அருவருப்பு!
இசை பாடும் தமிழ்க் கொண்டு
ஏன் இன்னும்
வடக்கன், பீடா வாயன் என்று
அசிங்கமாய்
வசை பாடிக் கொண்டு இருகிறீர்கள்?
அவர்களும் இந்தியர்கள் தானே?
அவர்களும் பாரத தாயின்
புதல்வர்கள் தானே?
புதிய கல்விக்கொள்கைப் பற்றி
நேற்றுப் பெய்த மழையில்
இன்று முளைத்தக் காளான்கள்
எல்லாம் கூச்சலிடுவது
வேடிக்கையாக உள்ளது,
புதிய கல்விக் கொள்கை
என்னவென்று முழுமையாய்
தெரிந்துக்கொண்டு விட்டார்களா?
முழுவதும் படித்து
புரிந்துக்கொண்டு விட்டார்களா?
தம்பிள்ளைகள் மட்டும்
பன்மொழிகள் படிக்கலாம்
எம் பிள்ளைகள்
மும்மொழி கூட படிக்கக்கூடாதா?
இது எந்த ஊர் நியாயம்?
தமிழ்நாட்டில் இருக்கும் சில பள்ளிகளில்
தமிழில் பேசினால் அபராதம் - இதுவா
தமிழை வளர்க்கும் இலட்சணம்
தமிழுக்கே அல்லவா அவமானம்?
வேறு நாட்டில் தோன்றிய
உருது மொழி இங்கே கற்கலாம்
தடைகள் இல்லை - நம்
நாட்டில் தோன்றிய
தமிழைப் போன்றே சிறப்பு வாய்ந்த
தேவமொழியாம்
சமஸ்கிருதம் கற்க மட்டும்
ஏன் தடையும் வெறுப்பும்
வஞ்சமும் வன்மமும்?
உருது கற்றுத் தரும்
பள்ளிகளில் தமிழுக்கு விலக்கு,
தமிழை வளர்க்கும் அரசே
சற்று அதை விளக்கு!
பெரும்பான்மையான
ஹிந்து மதத்தை மட்டும்
வெறுக்கும் மத அரசியல்,
மக்களைப் பிரித்துக்
குளிர் காயும் சாதி அரசியல்,
இது போதாதென்று
ஏன் இந்த மொழி அரசியல்?
நான் பள்ளி சென்றக் காலத்திலும்
தார் கொண்டு
இந்தி எழுத்துக்களை அழித்தனர்,
இன்று அவர்களின்
பேரன் பேத்திகள்
பள்ளி செல்கின்ற
இந்தக் காலத்திலும்
அதே தாரை வைத்து
அதே எழுத்துகளை
அழித்துக்கொண்டிருகின்றனர்!
இந்தி எழுத்துகளை
தார் கொண்டு அழித்தால்
இந்தி ஒழிந்திடுமா?
சீப்பை ஒளித்து வைத்தால்
திருமணம் நின்று போய்விடுமா?
மொழியை வைத்து
அரசியல் செய்து மக்களைக் குழப்ப
இது
ஆயிரத்து தொள்ளாயிரத்து
அறுபத்து ஐந்து அல்ல
இரண்டாயிரத்து இருபத்து ஐந்து,
இயற்கை அறிவோடு
செயற்கை அறிவும்
போட்டி போடும் காலம்!
புது மொழி என்பது
புதிய இடத்திற்கான ஒரு பாலம்,
புது மொழிகள் கற்றால்
உங்கள் வேடம் கலைந்து விடும்
என்ற
அச்சத்தினாலா இந்த ஓலம்,
மொழியை வைத்து அரசியல் செய்து
வென்றது அந்தக் காலம்,
புது புது மொழிகள்
கற்றுக்கொள்ள வேண்டிய அவசியம்
உண்டானது இந்தக் காலம்,
எதையும்
புதிது புதிதாய்க் கற்றுக்கொள்ள
என்றுமே போதாது காலம் - இதை
புரியாது உழல்வோர்களுக்கு
இனிமேல்
என்றுமே போதாத காலம்!
தமிழ் தமிழ் என்று பேசி - தங்களை
மேம்படுத்திக்கொண்டவர்களே
இங்கு அதிகம்,
தமிழை மேம்படுத்தவில்லை
துளியும்!
குண்டு சட்டியில்
குதிரை ஓட்டுவதால்
என்ன பயன்?
யாருக்குத் தெரியும்
நம் தமிழின் அருமை?
குன்றின் மீது ஏறியல்லவா
பறை சாற்ற வேண்டும்
தமிழின் பெருமையை,
'மறைவாக நமக்குள்ளே பழங்கதைகள்
சொல்லுவதிலோர் மகிமை யில்லை
திறமான புலமையெனில் வெளிநாட்டோர்
அதை வணக்கஞ் செய்தல் வேண்டும்"
என்றார் மகஹாகவி பாரதியார்,
அதை தான்
பாரதப் பிரதமர் மோடி
இன்று செய்கிறார்
பாரெங்கும் தமிழின் பெருமையை
கொண்டு சேர்க்கிறார்!
தமிழைக் காட்டுமிராண்டி மொழி
என்றவரை
தந்தை என்று கொண்டாடுபவர்கள்,
தான் செல்லுமிடமெல்லாம்
தமிழைப் போற்றும்
தரணி புகழ் தலைவரை
நிந்தை செய்வது தான் விந்தை!
தமிழ்நாட்டில்
தமிழை தவறின்றி
பேசுபவர்கள்,
படிப்பவர்கள்,
எழுதுபவர்கள்
எத்தனை பேர்?
ஆங்கிலச் சொற்கள் கலக்காமல்
தமிழில் பேச
எத்தனைப் பேரால முடியும்?
இது தானா
அறுபது ஆண்டு காலம்
தமிழ் வளர்த்த அழகு?
"பத்தாம் வகுப்புத் தேர்வில்
25000 மாணவர்களுக்கு மேல்
தமிழில் தேர்ச்சிப் பெறவில்லை'
என்கிறது நாளிதழ் செய்தி,
தமிழ்ச்சொற்கள் எல்லாம்
அச்சம் கொள்கின்றன,
சமூக ஊடகங்களில்
நவீன போராளிகளின்
தமிழ்க்கொலைக் கண்டு,
வீணாக வெற்றுப் பெருமை
பேசுவதை விட்டு விட்டு
தமிழை அனைவரும் ஒழுங்காகக்
கற்றுக்கொள்ள வைப்பதே
நல்லதோர் அரசின் கடமையாகும்!
வள்ளுவருக்கு
கோட்டம் அமைப்பதும்
சிலை வைப்பதும்
மட்டுமல்ல தமிழ்த்தொண்டு,
வள்ளுவர் சொன்ன வழி
நடப்பதும் தான்
தமிழ்த்தொண்டு - நடந்தால்
வள்ளுவரே மகிழ்வார்
அதைக் கண்டு!
தமிழகத்துக்கு
நீட் தேர்வு வேண்டாம்,
தமிழக மாணவர்கள்
மூன்றாவதாக ஒரு மொழி
கற்க வேண்டாம்,
என்று கல்வியை வைத்து ஏன்
தடங்கல் செய்கிறீர்கள்?
தமிழக மாணவர்கள்
அறிவில் குறைந்தவர்களா?
இல்லை
மற்ற மாநிலத்தை விட
ஆற்றலில் குறைந்தவர்களா?
சில சுயநலவாதிகளின்
எதிர்காலத்துக்காக
பல இலட்ச மாணவர்களின்
எதிர்காலத்தோடு
விளையாட வேண்டாம்!
பிற மொழிகளை வெறுத்து தான்
தமிழ் மொழியைக் காக்க வேண்டும்
என்ற பரிதாப நிலை
என்றும் நம் தமிழுக்கு இல்லை,
தமிழர்கள்
தமிழை
தமிழாகப் பேசினாலே
தமிழ் வாழ்வாங்கு வாழும்!
மொழி அவசியம் வேண்டும்
மொழி அரசியல் வேண்டாம்!!!
தாய்த்தமிழை நேசிக்கும்
இராம்ஸ் முத்துக்குமரன்.