Chidhambaram Natarajar Temple

Karur Stampede
Featured

என்று தணியும் இந்த சினிமா மோகம்...

"செந்தமிழ் நாடு எனும் போதினிலே - இன்பத்
தேன் வந்துப் பாயுது காதினிலே"

பாவம் மகாகவி பாரதியார், நல்லவேளை இன்று உயிரோடு இல்லை.

தமிழ் நாட்டைப் பற்றி என்னென்ன கனவு கண்டார், கண்டிருப்பார், எவ்வளவு உயர்வாக எண்ணி இருந்தார். இப்படி, ஒரு சினிமா நடிகரைப் பார்க்கப் போய் உயிரை விடுவார்கள் என்று கனவில் கூட கற்பனை செய்திருக்கமாட்டார். ஓர் உயிர் போனாலே துயரம், நாற்பத்தியோர் உயிர் அநியாயமாகப் போய்விட்டதே. யாரை குற்றம் சொல்வது? உயிர் போய்விட்டதே என வருந்துவதா? இல்லை இப்படி உயிர்போய் விட்டதே என்று வருந்துவதா?

நம் சமுதாயம் மற்றும் கலாச்சாரம், சீரழிவதற்கு (சாராயம், போதை, வன்முறை, ரௌடியிசம், பாலியல் வன்கொடுமை இன்னும் பல) முக்கியமானக் காரணம் இந்த சினிமாவும், சினிமா மோகமும் தான். சினிமாவில் நடித்து பிரபலமாகி விட்டால், தாங்கள் தான் மற்ற எல்லோரை விடவும் மிகவும் உயர்ந்தவர்கள் என்ற நினைப்பு பல நடிகர் நடிகைகளுக்கு. அப்படிப்பட்ட சினிமா நடிகர் நடிகைகள் மீது, நம் மக்களுக்கு ஏனி இப்படிப்பட்ட ஒரு ஈர்ப்பு? ஏன் இந்த சினிமா மாயையில் கிடந்து உழல்கிறார்கள்? அவர்களும் நம்மைப் போன்ற ஒரு சாதாரண மனிதர்கள் தானே? அவர்களும் வாயால் தானே சாப்பிடுகிறார்கள். அவர்கள் வியர்வை மட்டும் இனிக்குமா இல்லை மணக்குமா? அவர்கள் என்ன தேவதூதர்களா இல்லை வானில் இருந்து நேரடியாக குதித்து வந்தவர்களா? அவர்களைக் காண ஏன் இத்தனை ஆர்வம்? அவர்களை நேரில் கண்டுவிட்டால் உங்கள் வாழ்க்கை நோக்கம் நிறைவேறி விட்டதா? பிறந்த பலனை அடைந்துவிட்டீர்களா? என்ன ஒரு கேவலமான நிலைமையில் இருக்கிறார்கள் நம் தமிழ் மக்கள், குறிப்பாக இளவயதினர்?

இதனால் தான் கத்துக்குட்டி நடிகர்களில் இருந்து வெத்துவேட்டு நடிகர்கள் வரை அனைவரும் இரண்டு படங்கள் வெற்றிப் பெற்றுவிட்டால், அடுத்த முதல்வராக தங்களை எண்ணிக்கொள்கிறார்கள். சினிமாவில் நல்லவனாக நடிப்பதைத் தவிர வேறு என்ன நல்லது செய்திருப்பார்கள், இந்த நடிகர்கள் நாட்டு மக்களுக்கு? பின் எவ்வாறு அவர்களை இப்படி தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடுகிறோம்.Karur Stampede 1

எனக்கு சினிமாவின் மீதோ அல்லது சினிமா நடிகர் நடிகைகள் மீதோ எந்த வெறுப்பும், பொறாமையும் காழ்ப்புணர்ச்சியும் கிடையாது. நானும் சினிமா பார்ப்பவன் தான், எனக்கும் சில நடிகர்களைப் பிடிக்கும், அதற்காக அவர்களே கதி என்று இருப்பதா? அவர்களுக்கு அது தொழில் நடிக்கிறார்கள் அதற்கான ஊதியத்தை, அதுவும் மற்ற எல்லா பணிகளில் கிடைக்கும் ஊதியத்தை விடவும் அதிகமாகப் பெற்றுக்கொள்கிறார்கள், அவ்வளவு தான். ஆனால் அந்த நடிகர் நடிகைகளை, உங்களை பெற்று வளர்த்து ஆளாக்கிய பெற்றோர்களை விடவும், உங்கள் குடும்பத்தினரை விடவும் உயர்வாக எண்ணி ஏன் நீங்கள் இப்படிக் கொண்டாடிக் களிக்கிறீர்கள். பொன்னான நேரத்தையும் அருமையான வாழ்க்கையும் அழிக்கிறீர்கள்? சினிமா பார்க்கும் அந்த 2 அல்லது 3 மணி நேரம் மகிழ்ச்சியாக இருந்தீர்களா, நல்லது, அதற்கு மேல் அதை விட்டுவிட வேண்டாமா? உங்கள் வாழ்க்கையில் அல்லவா கவனம் செலுத்த வேண்டும், அதை விட்டுவிட்டு இப்படியா போய் இந்த அரிய உயிரை விடுவது?

சுதந்திரம் அடைந்து இத்தனை வருடங்களில், தமிழகத்தைப் பெரும்பாலும் ஆண்டது, திரைத்துறை சார்ந்தவர்கள் தான். இந்தியாவில், ஏன் உலகிலேயே வேறு எங்கும் இந்த நிலை கிடையாது. அந்த அளவிற்கு சினிமா நம்மை வசியப்படுத்தி புத்தியை மழுங்கடித்து வைத்திருக்கிறது. மாயவலையில் சிக்க வைத்து மதி மயக்கியிருக்கிறது.

சினிமா வந்தப் புதிதில் சினிமா நடிகர் நடிகைகள் மீது இந்த ஈர்ப்பு, கவர்ச்சி இருந்தது என்றால் ஏற்றுக்கொள்ளலாம், ஆனால் இத்தனை ஆண்டுகள் கடந்தப் பின்னும், இன்னும் அப்படியே இருக்கிறோம் என்றால் எங்கோ தவறு இருக்கிறது என்று தானே பொருள்? நாம் எங்கே சென்று கொண்டிருக்கின்றோம். சினிமாவில் கதாநாயகனாக நடித்த கையுடன் மாநிலத்தை ஆளும் முதல் அமைச்சராக ஆவதற்கு எல்லோரும் எம்ஜியார் அவர்கள் கிடையாது. அந்தக் காலம் வேறு, இப்பொழுது நாம் 2026 ஆம் ஆண்டை நோக்கி நடைப்போட்டுக்கொண்டு இருக்கிறோம். இந்த இருபத்தொன்றாம் நூற்றாண்டு தொடங்கி கால் நூற்றாண்டு முடியப் போகிறது, ஆனால் நாம் இன்னும் திரையில் பார்த்த நடிகர் நடிகைகளே நேரில் பார்க்க அலைந்து, அவர்கள் பின்னால் ஓடி உயிரை மாய்த்துக்கொண்டிருக்கிறோம். இது எவ்வளவு பெரிய வீழ்ச்சி?

மற்ற மாநிலங்களை விட மிகவும் முன்னேறிய மாநிலம் என்று நம் தமிழ்நாட்டைப் பற்றிப் பெருமையாகப் பேசுகிறோம், கர்வம் அடைகிறோம், ஆனால் மற்ற மாநிலங்களில், நம்மைப் போல சினிமா நடிகர்கள் பின் சென்று உயிரைத் தொலைத்தவர்கள் யாரும் இல்லை. அவர்களுக்கு கொடுக்கவேண்டிய மதிப்பைக் கொடுக்கிறார்கள், வைக்க வேண்டிய இடத்தில் வைக்கிறார்கள். ஆனால், எதற்கெடுத்தாலும், வடக்கனஸ், பீடாவாயன், பானிப்பூரி விக்கிறவன் என்று எப்பொழுதும் வட மாநில மக்ககளைக் கேலிப் பேசுகிறவர்கள், எந்த வட மாநிலத்திலாவது, ஒரு நடிகரைப் பார்க்கப் போய் விலைமதிப்பில்லாத 41 உயிர்களை இழந்திருக்கிறார்கள் என்று சுட்டிக்காட்டமுடியுமா? "தமிழண்டா..." "சிங்கம்டா...", மற்ற மாநிலங்களை விடவும் தொழில் வளர்ச்சியிலும், கல்வியிலும் சிறந்த மாநிலம் என்று பெருமைக் கொள்கிறோம், ஆனால் அப்படிப்பட்ட மாநிலத்தில் தான் கள்ளச்சாராயம் குடித்து 66 பேர் மடிகிறார்கள், குடியிலும்/போதையிலும் தள்ளாடுகிறார்கள், குடிநீரில் மலம் கலக்குகிறார்கள், பல்கலைக்கழக வளாகத்துக்குள்ளேயே பாலியல் வன்கொடுமை, நடக்கிறது இது எவ்வளவு பெரிய அசிங்கம்?Karur Stampede 3

பகுத்தறிவு பகுத்தறிவு என்று வாய்கிழியப் பேசிவருகிறார்கள் பல காலமாக, ஆனால் அப்படிப்பட்ட பகுத்தறியும் மாநிலத்தில் தான் திரையில் நடிப்பதற்கும், நிஜ வாழ்க்கையில் உள்ளதற்கும் உள்ள வேறுபாடுகளைக் காண முடியாமல் இப்படி திரை மாயையில் விழுந்துக் கிடக்கிறார்கள். இன்று பலர் மடிந்தும் போய் விட்டார்கள்.

பொழுதுபோக்குக்கு தான் சினிமா. இவர்கள், காசுக்காக நடிப்பவர்கள். நாம் காசுக்கொடுத்து சினிமா பார்ப்பதால் தான் அவர்கள் அவ்வளவு வசதிவாய்ப்போடு வாழ்கிறார்கள். ஆனால் நாம், நம் தாய்த்தந்தை உழைத்து சம்பாதிக்கும் காசை, இப்படி யாரோ ஒருவன் சுகமாக வாழக் கொட்டிக்கொடுத்டுவிட்டு, இப்படி நடிகர் நடிகையர் பின்னே ஓடிக்கொண்டு இருக்கிறோம். காசுக்காக எப்படி வேண்டுமானாலும் நடிப்பவர்களை, உண்மையான தலைவனாக ஏற்றுக்கொள்ளும் எண்ணம் எப்படி வந்தது நமக்கு?

கோவிலில் கடவுளைப் பார்ப்பதற்கு காத்துக்கிடந்தாலும் அதில் ஒரு புண்ணியம் உண்டு, மனதில் தெய்வ நினைப்பு இருந்திருக்கும். நல்ல விஷயங்களை எண்ணிக் காத்துக்கொண்டு இருந்திருப்போம். ஆனால் ஒரு நடிகரைப் பார்ப்பதற்காக காலை பதினோரு மணியில் இருந்து இரவு எட்டு ஒன்பது மணி வரைக்கும், ஆகாரம் தண்ணீர் ஏதும் இல்லாமல் சுடும் வெயிலில் காத்துக்கிடக்கிறார்கள் என்றால் இவர்களை என்ன சொல்வது, இந்த நிலையை எண்ணி வருந்துவதா, இல்லை இதனால் ஏற்பட்ட அழிவைக் கண்டு வருந்துவதா? இவ்வளவு நேரம் காத்திருப்பார்கள் என்று தெரிந்தும் தாமதமாக அந்த நடிகர் வந்தார் என்றால், அவரை நேசிக்கும் இரசிகர்கள் மீது அவர் வைத்திருக்கும் மதிப்பு அவ்வளவுதான் என்பது தெரியவில்லையா?

இந்த நடிகரின் இரசிக விசிலடிச்சான் குஞ்சுகளின் அட்டாகாசங்கள் அதற்கு மேல். காணும் பொழுதே முகம் சுழிக்க வைக்கின்றது. மரத்தில் ஏறி மரக்கிளைகளில் குரங்கு போல் தொத்திக்கு கொண்டு இருப்பது. எல்லா கட்டிடத்திலும் ஏறுவது. கோவில் கோபுரத்தில் ஏறி நிற்பது. வண்டிக்குப் பின் ஓடுவது. மோட்டார் சைக்கிளில் துரத்தி சாகசங்கள் செய்வது.. என்ன செய்கிறோம் என்றே தெரியாமல் போதையில் ஆ... ஊ.. என்று சேட்டைகள் செய்வது. அவ்வளவு ஏன், ஆபத்தை உணராமல், மின்சார ட்ரான்ஸ்பார்மகர்ள் மீது கூட ஏறி நிற்பதை என்ன சொல்வது.. நடிகரைப் பார்க்க, தடுப்பு கம்பிகளில் ஏறி பவுன்சர்களால் தூக்கி எறியப்பட்டாலும் சொரணை இல்லாமல் இருப்பது. இப்படிப்பட்ட இரசிகர்களின் செயலகளைக் கண்டிக்காமல் இருக்கும் ஒருவர் எப்படி ஒரு நல்ல தலைவராக முடியும்?

"ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன்மகனைச்
சான்றோன் எனக்கேட்ட தாய்"

என்றார் திருவள்ளுவர். இந்த மாதிரி பிள்ளைகளைப் பெற்ற தாய்மார்கள் எவ்வளவு வருந்துவார்கள்?

நேர்ந்த இந்த துயர சம்பவத்திற்கு பெற்றோர்களும் பொறுப்பு ஏற்கவேண்டும், கண்டித்து வளர்காத பிள்ளைகள், தறிகெட்டுப் போகும், என்பது இந்த இரசிகர்கள் செய்யும் அடாவடிகளில் இருந்து தெரிந்துக்கொள்ளலாம். இவற்றை விட ஒரு நடிகரைப் பார்ப்பதற்கு இவ்வளவு பெரிய கூட்ட நெருக்கடியில், கைகுழந்தைகளையும், சிறுவர் சிறுமிகளையும் கூட்டி சென்றது எல்லாம் மிக மிக கண்டிக்கவேண்டிய செயல். அவர்களாகவே வெட்கி தலை குனிய வேண்டும். ஆனால் கர்பிணிப் பெண்கள் கூட சென்றிருக்கிறார்கள் என்ற செய்தியைப் படிக்கும் பொழுது என்ன சொல்வது என்றே தெரியவில்லை. அதனால் தான் சினிமா மாயை என்கிறார்கள்.Karur Stampede 4

கதாநாயகிகளுடன் நெருக்கமாக நடிக்க முடிந்த நடிகர்களுக்கு, ஒரு சண்டைக்காட்சியில் நடிக்க வேறு ஒரு நபர் "டூப்"பாக நடிக்க வேண்டியிருக்கிறது. ஏனென்றால் டூப்பாக நடிப்பவர்கள் உயிர் பெரிதில்லை, அவர்கள் காயம் அடைந்தால், அதைப் பற்றி ஒன்றும் கவலையில்லை, இத்தனைக்கும், அந்த டூப் நடிகர்கள் கோடியில் சம்பளம் வாங்குவதில்லை. அவ்வளவு வீரமானவர்கள்/விவரமானவர்கள் நம் கதாநாயகர்கள். இவர்களைத் தான் நாம் நிஜ ஹீரோக்கள் என்று தலை மீது தூக்கி வைத்துக் கொண்டாடிக்கொண்டு இருக்கின்றோம், ஆனால் அவர்களுக்கு நீங்கள் எல்லோரும் கால்தூசி தான். இல்லையென்றால் இத்தனை அசம்பாவிதங்கள் நடந்தப் பின்னரும் ஒரு மனிதாபிமானம் இல்லாமால், ஆறுதல் சொல்லாமல் அந்த இடத்தை விட்டு அவ்வளவு விரைவாக சென்றிருப்பாரா? இது போன்ற சூழ்நிலையில் துணை நின்று உதவி செய்பவன் தானே தலைவன்? உங்களால் ஏற்பட்ட இந்த ஓர் இக்கட்டான நிலைமையில், துணிந்து முடிவு எடுக்கத் தெரியாதவர், முடியாதவர் எப்படி முதலமைச்சர் ஆகி, மற்ற முக்கியாமான பிரச்சனைகளுக்கு தீர்வு காணமுடியும்?

நான்கு முறை தொடர்ந்து குஜராத்தின் முதல் அமைச்சராகவும், மூன்று முறை தொடர்ந்து இந்த பாரதத் திருநாட்டின் பிரதமராக இருக்கும், நாட்டை முன்னேற்றப் பாதையில் நடத்திச்செல்லும் மோடிஜி அவர்களைப் பார்த்து, "நரேந்திரபாய் தாமோதரதாஸ் மோடிஜி அவர்களே" என்று ஏளனத் தொனியில் கேள்வி கேட்ட, நேற்றுப் பெயத மழையில் முளைத்த இந்தக் காளானுக்கு தலைமைப் பண்பின் அர்த்தம் தெரியுமா? நாட்டை வழி நடத்த எந்த அளவு திறனும், அனுபவமும், பொறுமையும், தைரியமும், முடிவெடுக்கும் ஆற்றலும் வேண்டும் என்று கொஞ்சமாவது தெரியுமா? யார் வேண்டுமானாலும் பிரதமரிடம் கேள்விக் கேட்கலாம், அவர்களுக்கு உரிமை உண்டு. ஆனால், தன் கூட்டத்தில் நடந்த ஒரு மிக மிக துயரமான சம்பவத்தில், உடன் இருந்து ஆறுதல் சொல்லக்கூட முடியாமல் ஓடி ஒளிந்தவர், சில நாட்கள் முன்பு, ஒரு மாபெரும் தலைவரைப் பார்த்து ஏளனமாகக் கேள்விக் கேட்டாரே, சற்று சிந்தித்துப் பார்ப்பாரா? விசிலடிச்சான் குஞ்சுகள் "தலைவா" என்று கத்திக் கூச்சலிடுவதால் எல்லாம் ஒருவர் உண்மையானத் தலைவராக ஆகிவிட முடியாது. திரையில் பேசிய வசனத்தை மேடையில் பேசுவதால் ஒரு மாற்றமும் ஏற்படாது, திரையில் விசிலடித்தவர்கள் தான் மேடையில் பேசும்பொழுதும் விசிலடிக்கிறார்கள் என்பதை உணரவேண்டும்.

நம் நாட்டைப்பாதுகாக்கும் இராணுவ வீரர்களுக்குக் கொடுக்காத மரியாதையை இப்படி திரையில் வரும் பொய் பிம்பத்துக்குக் கொடுப்பது எவ்வளவு கேவலம்? எல்லையைப் பாதுகாக்கும் நிஜ ஹீரோக்களான நம் இராணுவ வீரர்கள் உண்மையாகவே, உண்மையான துப்பாக்கிக் குண்டுகளையும், வெடிகுண்டுகளையும் எதிர்கொண்டுவருகிறார்கள், நாட்டிற்காகத் தங்கள் இன்னுயிர்களை தியாகம் செய்கிறார்கள். ஆனால் அவர்களை எல்லாம் கொண்டாடுவதில்லை நாம். அதையே திரையில் வெற்று குண்டுகளை தாங்கி, காயம்பட்டதைப் போல் நடித்தால் கைத்தட்டி, ஆராவாரம் செய்து கொண்டாடுகிறோம். இது என்ன ஒரு மனநிலை.

சினிமா ஒரு பலம் வாய்ந்த ஊடகம், ஆயுதம். அதைப் பயன்படுத்தி பணம் சம்பாதிக்கிறீர்கள், நன்றாக சம்பாதியுங்கள், ஆனால் அதை நல்ல விஷயத்தை சொல்லப் பயன்படுத்துங்கள், விஷத்தை ஊட்டப் பயன்படுத்தாதீர்கள். அன்று, இராஜராஜ சோழனையும், வீரபாண்டியக் கட்டபொம்மனையும் நமக்குப் படம்பிடித்துக் காட்டியது இந்த சினிமா தான், கப்பலோட்டிய தமிழனையும் நம் தமிழ் கலாச்சாரத்தையும், நல்ல கருத்துகளையும் காட்டியது இந்த சினிமா தான். ஆனால் இன்று எல்லா தீமைகளை காட்டுவதும் இந்த சினிமா தான். அன்று வில்லன்கள் தான் சாராயம் குடிப்பார்கள், கதாநாயகன் உத்தமனாக இருப்பார். ஆனால் இன்றைய சினிமாவில், பெரும்பாலும் எல்லா அட்டூழியத்தையும் கதாநாயகன் தான் செய்கிறான், ஆனால் வில்லனைப் பக்திப்பழமாகக் காட்டுகிறார்கள். என்ன விதைக்கிறார்கள் மக்கள் மனதில்? தங்களுக்குப் பிடிக்காத நல்லவர்களைக் கெட்டவர்களாக காட்டுவதும், தங்களுக்குப் பிடித்த கெட்டவர்களை நல்லவர்களாக காட்டுவதும் இந்த சினிமாதானே.

சினிமாவில் வருவதை எல்லாம் அப்படியே நம்புபவர்கள் நம் நாட்டில் அதுவும் நம் தமிழகத்தில் அதிகம், அதனால் தான் இந்த இழிநிலை.

நடிகைக்கு கோவில் கட்டியது நம் ஊரில் தான்
நடிகரின் கட்டவுட்டுக்கு பால் அபிஷேகம் செய்வதும், செய்து கீழே விழுந்து பலியாவதும் நம் ஊரில் தான்
நடிகருக்காக வாழ்க்கையைத் தொலைப்பது நம் ஊரில் தான்
இன்று ஒரு நடிகருக்காக
இத்தனை இன்னுயிர்களை இழந்ததும் நம் ஊரில் தான்!

ஒருத்தர் என்னடா என்றால் இத்திருநாட்டை உயர்த்த பகல் இரவு பாராமல், அவ்வளவு பாடுபடுகிறார். ஒவ்வொரு நாட்டிற்கும் சென்று இந்தியாவின் பெருமைகளைப் பட்டியலிட்டுப் பறைசாற்றி நாட்டிம் மதிப்பை உயர்த்துகிறார். அதிலும் குறிப்பாக, இந்தியா வல்லரசாவதற்கு இளைஞர்களின் பலமும் திறமையும் தான் காரணம் என்று போகும் எல்லா இடங்களிலும் சொல்லிவருகிறார். ஆனால் தமிழக இளைஞர்களில் பலரோ இப்படி திசைமாறி சில நடிகர்கள் பின் சென்று சீரழிகிறார்கள். இதைப் பார்க்கும் மற்ற மாநிலத்தவர், பிற நாட்டினர் நம்மை பற்றி என்ன நினைப்பார்கள்?

நம் தமிழகத்தில் மட்டும் தான் எல்லாவற்றிற்கும் சினிமா நடிகர் நடிகைகள் தேவைப்படுகிறார்கள். எல்லா விழாக்களுக்கும் நடிகர் நடிகைகள் தான் சிறப்பு விருந்தினர்கள். அவர்களும் தங்களை மற்ற அனைவரையும் விடவும் உயர்வாக எண்ணிக்கொண்டு நமக்கு அறிவுரை வழங்குகிறார்கள், கடைத் திறப்பு விழாவில் இருந்து கல்லூரி ஆண்டுவிழா வரை சினிமா நடிகர் நடிகைகளைத் தான் பெரும்பாலும் அழைக்கிறார்கள். அவ்வளவு ஏன், சமீபத்தில் நடந்த அரசு விழாவில், அரசாங்கமே சினிமா நடிகர் நடிகைகளை அழைத்து வைத்து தான் அரசியல் செய்கிறது.. அதுவும், கல்விக்காக நடத்திய "கல்வியில் சிறந்த தமிழ்நாடு" விழாவில் கூட சிறப்பு விருந்தினர்கள் எல்லாம் திரைத்துறையை சார்ந்தவர்கள் தான், ஏன் கல்வியில் சிறந்த, சாதித்த ஒருவர் கூட தமிழ்நாட்டில் கிடைக்கவில்லையா? அப்புறம் மக்கள் எப்படி இருப்பார்கள்?

இந்தப் பெரும் துயரத்தில் ஆளும் அரசு, காவல்துறை, கூட்டம் நடத்தியக் கட்சி மற்றும் கொஞ்சம் கூட சிந்திக்காமல் பெருங்கூட்டமாக வந்துக் கலந்துக்கொண்ட இரசிக விடலைகள், குழந்தைகள் மற்றும் சிறுவர் சிறுமிகளை அழைத்து வந்தப் பெற்றோர்கள், பொதுமக்கள் எல்லோருக்குமே பங்குண்டு. திட்டமிட்ட ஒரு சதியாகக் கூட இருக்கலாம் என்று சில தகவல்கள் வருகிறது. இனி ஒவ்வொன்றாக உண்மைகள் வெளி வரும் என்று நம்புவோம். பொறுத்து இருந்துப் பார்ப்போம்.

எது எப்படியோ, இது எல்லாவற்றிற்கும் தொடக்கப்புள்ளி, இந்த சினிமா தான். இதே சினிமாவில் தான் அன்று, பட்டுக்கோட்டையார் "திருடனாய்ப் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது" என்றுப் பாடினார், அது போல, மக்களாகப் பார்த்து எது நல்லது? எது கெட்டது? என்று உணர்ந்து திருந்தாவிட்டால் இது போன்ற அசம்பாவிதங்களை இனிமேலும் தடுக்க முடியாது.

இப்படிப்பட்ட சினிமா இன்று யார் கட்டுப்பாட்டில் இருக்கின்றது என்பதும் எல்லோருக்கும் தெரியும், சினிமா தொடர்பில்லாத, பொற்கால ஆட்சி தந்த காமராஜர் அவர்களை, சினிமாவை வைத்து தோற்கடித்தற்கான பலனை இன்று வரை இன்னும் அனுபவித்துக் கொண்டிருக்கின்றோம்.

இனிமேலாவது, செம்மறி ஆட்டு மந்தை மனநிலையில் நடிகர் நடிகைகள் பின்னால் செல்லாமல், சினிமா என்ற நிழலை நிஜம் என்று நம்பி மாயையில் விழுந்து, கானல் நீரை, தாகம் தீர்க்கும் நன் நீர் என்று தேடி ஓடி அலைந்து வாழ்க்கையைத் தொலைத்து விடாமல் இருக்கவேண்டும் என்று வேண்டுகிறேன். இருப்பார்களா?

என்று தணியும் இந்த சினிமா மோகம்?

நன்றி.

வருத்தத்துடன்
இராம்ஸ் முத்துக்குமரன்.

தொடர்புடைய கட்டுரைகள்

Thiru Vijayakanth

கருப்பு நிலா

Spring and Fall time change

வெளிச்சத்தை சேமிக்க முடியுமா?

தமிழ்நாடா? தமிழகமா?

தமிழ்நாடா? தமிழகமா?

உங்கள் மின்னஞ்சல் தேடி செய்திமடல் வர‌

என்னைப் பற்றி

எனது பெயர் இரா(ம்ஸ்) முத்துக்குமரன்.  தமிழின் பால் கொண்ட பற்றினாலும், தமிழ் மொழியின் மேன்மை மற்றும் சிறப்பினை அனைவருடனும் பகிர்ந்து கொள்ளவும் இந்த இணையத்தளத்தை தொடங்கியுள்ளேன்.

தொடர்பு கொள்ள‌

இத்தளத்தில் நிறை குறைகள் இருந்தால், நிறைகளை மற்றவர்களுக்கும், குறைகளை என்னிடமும் தெரிவிக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். என்னை தொடர்பு கொள்ளவேண்டிய மின்னஞ்சல் முகவரி admin@thamizharuvi.com அல்லது admin@thamizharuvi.net